
ஆன்லைன் விளையாட்டு தளங்கள் பற்றி மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

பந்தயம் மற்றும் சூதாட்டம் பற்றிய சட்டங்கள், மாநிலங்களுக்கான விசயங்கள் ஆகும் என மக்களவையில், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி நேரத்தில் இன்று பேசும்போது, ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகி இருக்கிறதா? என கேட்டதுடன், தமிழக அரசு அதனை தடை செய்து இருக்கிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கான தளங்களையும் தடை செய்வதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? என்றும் கேட்டார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறையின் மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசும்போது, மத்திய அரசுக்கு கட்டளையிடும் உரிமை எதுவும் மாறனுக்கு கிடையாது என கூறியதுடன், அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட மத்திய கட்டமைப்பின்படியே நாடு இயங்குகிறது என கூறினார்.
அதனால், மத்திய கட்டமைப்பை பற்றி தயவு செய்து படித்து பார்க்கவும். நாட்டின் மத்திய கட்டமைப்பை மதிக்கும்படியும், அரசியலமைப்பை பாதுகாக்கும்படியும் உறுப்பினரை கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் பேசினார்.
இதேபோன்று மற்றொரு துணைநிலை கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியன பற்றிய சட்டங்கள், மாநிலங்களுக்கான விசயங்கள் ஆகும் என கூறினார்.
புகார் அடிப்படையில் முன்பே 1,410 ஆன்லைன் விளையாட்டு தளங்கள் தடை செய்யப்பட்டு விட்டன என்றும் அவையில் அவர் தகவலாக தெரிவித்து உள்ளார். புதிய குற்றவியல் சட்டத்தின் 112-ம் பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.