< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
26 Jun 2024 5:09 PM IST

பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் நடந்த 2 பயங்கரவாத தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த 2 தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்புப்படையினர் பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும் சந்தேகிக்கப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகைப்படத்தை வெளியிட்டு அவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப்படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக, நேற்று மாலை ரஜோரி மாவட்டத்தின் சிங்குஸ் பகுதியில் உள்ள பிண்ட் கிராமத்தில் இருந்து சீன கையெறி குண்டு பாதுகாப்புப்படையினரால் கைப்பற்றப்பட்டது.


மேலும் செய்திகள்