ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் 16-ம் தேதி தாக்கல்
|'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்.18ம் தேதி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. 2029 தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை வருகிற 16-ம்தேதி தாக்கல் மக்களவையில் செய்ய உள்ளார். ஏற்கெனவே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதா தாக்கல் செய்யப்படும்போது மக்களவையில் கூச்சல், குழப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.