< Back
தேசிய செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்பு
தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்பு

தினத்தந்தி
|
18 Dec 2024 8:35 PM IST

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.

இதன்படி 3 சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, கடந்த 12-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நேற்று மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 31 பேர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவில் இடம்பெற பா.ஜ.க. சார்பில் ரவி சங்கர் பிரசாத் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளன.

அதே சமயம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி மற்றும் சாகேத் கோகலே, சிவசேனா சார்பில் ஸ்ரீகாந்த் ஷிண்டே, தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி மற்றும் பி.வில்சன் ஆகியோர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பி.பி.சவுத்ரி, காங்கிரஸ் எம்.பி.க்கள் சுக்தியோ பகத், ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை காரணமாக, நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்