ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந் தேதி நடை திறப்பு
|ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
15-ந் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும்.
தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.