
நகைக்கடையில் நடந்த நூதன திருட்டு - சி.சி.டி.வி.யால் சிக்கிய பெண்

பீகாரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண் சி.சி.டி.வி. காட்சிகளால் சிக்கினார்.
பாட்னா,
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள சிலாய் மார்க்கெட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவதற்காக வந்தனர். அங்கிருந்த கடைக்காரரிடம் நகைகளைக் காட்டுமாறு கூறினர். கடைக்காரர் சில தங்க மோதிரங்களை அவர்களுக்கு காண்பித்தார். அந்த பெண்களில் ஒருவர் மோதிரங்களை எடுத்துப் பார்ப்பதுபோல், அவற்றில் சிலவற்றை யாரும் பார்க்காத நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கினார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து நகைகளின் மாடல் பிடிக்கவில்லை என்று கூறி, எதையும் வாங்காமல் இருவரும் கடையை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது எடுத்துக் காட்டிய மோதிரங்களை எண்ணிப்பார்த்த கடைக்காரர் அவை குறைந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பெண்களை தடுத்து நிறுத்தி, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த பெண் மோதிரங்களை விழுங்கியது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்து, அவர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தார். அந்த பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.