ஒடிசா: 7 வயது மாணவனை பள்ளி கதவில் கட்டி வைத்து, தாக்கிய ஆசிரியர்
|ஒடிசாவில் 7 வயது மாணவனை, அந்த பள்ளியின் நுழைவு வாசலில் இருந்த கதவில் கட்டி வைத்து, அடித்து ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.
கேந்திரப்பாரா,
ஒடிசாவின் கேந்திரப்பாரா மாவட்டத்தில் மார்ஷாகாய் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், வகுப்பறையில் மாணவன் ஒருவன் விளையாடி கொண்டு இருந்திருக்கிறான்.
இது வகுப்பில் இருந்த ஆசிரியருக்கு இடையூறாக இருந்துள்ளது. மற்ற மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர் ஆத்திரம் அடைந்துள்ளார். அந்த 7 வயது மாணவனை தரதரவென இழுத்து சென்று, அந்த பள்ளியின் நுழைவு வாசலில் இருந்த கதவில் கட்டி வைத்து, அடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அவருடன் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டு சிறுவனை அடித்துள்ளனர்.
இதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் அது பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்திலேயே வெளிவந்தன. இது நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆசிரியர்களுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.