< Back
தேசிய செய்திகள்
நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
தேசிய செய்திகள்

நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

தினத்தந்தி
|
9 Dec 2024 4:02 AM IST

சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கேரள கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில் கடந்த வெள்ளியன்று(06.12.2024) செய்தி வெளியானது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும். அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார். இதனால், பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு கேரள ஐகோர்ட்டு கடந்த வெள்ளியன்று(06.12.2024) தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப்பிற்கு சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கியதற்கு சபரிமலை தேவசம் போர்டு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்திருந்தது. சபரிமலையில் யாருக்கும் விஐபி தரிசனம் அளிக்கக்கூடாது என்று ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்தது ஏன் என கேரள ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும், போலீசுக்கும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில்;

நடிகர் திலீப் தரிசனம் செய்யும் போது மற்ற பக்தர்களுக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது உண்மைதான் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறிஉள்ளார். இதனிடையே திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்த விவகாரம் தொடர்பாக நிர்வாக அதிகாரி, செயல் அலுவலர் மற்றும் 2 பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்