< Back
தேசிய செய்திகள்
ஒடிசாவில் டானா புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை: முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி
தேசிய செய்திகள்

ஒடிசாவில் டானா புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை: முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி

தினத்தந்தி
|
25 Oct 2024 1:21 PM IST

உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெற்றி பெற்றது என்று மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை இன்று காலை அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது, , ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜெகநாதரின் அருளாலும், அனைவரின் ஒத்துழைப்பாலும், அரசு மனித உயிர்களை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், சாலைகளில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்திருப்பதும் கூட இன்று பிற்பகலுக்குள் அகற்றப்படும் என்றும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணிக்குள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கேந்திரபாரா, பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டம் உட்பட அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்