< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி விண்வெளிக்குச் செல்வதற்கு முன்... மணிப்பூருக்கு செல்ல வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி விண்வெளிக்குச் செல்வதற்கு முன்... மணிப்பூருக்கு செல்ல வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்

தினத்தந்தி
|
4 July 2024 2:27 PM IST

விண்வெளிப் பயணத்தில் பிரதமர் மோடியும் இணையக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

புதுடெல்லி,

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதங்களாக நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை அங்கு செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்த சூழலில் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிப் பயணத்தில் பிரதமர் மோடியும் இணையக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த செய்தியை தனது எக்ஸ் வலைத்தளத்தில் டேக் செய்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "விண்வெளி செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவின் சார்பில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விண்வெளிக்கு செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்