டெல்லி காற்று மாசுபாடு: மாநில அரசு மீது சுப்ரீம்கோர்ட்டு கடும் அதிருப்தி
|டெல்லியில் பட்டாசு வெடிக்க ஆண்டு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 349 ஆக பதிவாகி உள்ளது. காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்ததால், டெல்லியின் பல்வேறு பகுதிகள் இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது.
காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். பவானா மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகிய பகுதியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் மாநில அரசு மீது சுப்ரீம்கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, "மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த செயலிலும் சமரசம் கூடாது. வாழ்வதற்கு ஏற்ப மாசற்ற சூழ்நிலையை உருவாக்குவது அடிப்படை உரிமை.
மாசுபாட்டை ஊக்குவிக்கும் அல்லது மக்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யும் எந்த ஒரு செயலையும் எந்த மதமும் ஊக்குவிப்பதில்லை. டெல்லியில் பட்டாசு வெடிக்க பண்டிகை காலங்களில் மட்டும் தடை விதித்தால் போதாது. திருமணம், தேர்தல் நேரங்களிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக் கூடாது..? ஜனவரி ஒன்றாம் தேதி வரை தற்போது தடை உள்ளது. அதனை ஆண்டு முழுவதும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் பட்டாசு தடையை அமல்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.