இறந்தவரின் உயிரணுவை செயற்கை கருத்தரிக்க வழங்கலாம் - மருத்துவமனைக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
|புற்றுநோயால் உயிரிழந்த இளைஞரின் உயிரணுவை குளிருட்டப்பட்ட ஆய்வகத்தில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வந்தது.
புதுடெல்லி,
புற்றுநோய் பாதிக்கப்பட்டு டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞர் சிகிச்சை பலனின்றி 2020-ம் ஆண்டு இறந்தார். பெற்றோர் வேண்டுகோளின்படி இளைஞரின் உயிரணுவை குளிருட்டப்பட்ட ஆய்வகத்தில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வந்தது.
இந்நிலையில் வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிக்க வைக்க தங்கள் மகனின் உயிரணுவை ஒப்படைக்க கோரி மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினர். சட்டப்படி வழங்கிட மறுத்த மருத்துவமனை நிர்வாகம் கோர்ட்டு உத்தரவிட்டால் வழங்குவதாக தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் டெல்லி அரசு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு, கடந்த 2022 நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. .
இதில் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டு முறைப்படியும், வாடகை தாய் சட்டப்படி இறந்தவரின் உயிரணுவை வழங்கிடலாம் என அறிக்கை அளித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம்.சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தன் மகன் வழி பேரக் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனடிப்படையில் இறந்த மகனின் உயிரணுவை வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிக்க கோரியதில் நியாயம் உள்ளது. ஒருவரின் இறப்பிற்கு பின் அவரது உயிரணு மூலம் மீண்டும் செயற்கை கருத்தரிக்க செய்வதற்கு இந்திய சட்டத்தில் தடை எதுவுமில்லை எனவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அறிக்கை கவனத்தில் கொண்டு இறந்த மகனின் உயிரணுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் மராட்டியத்தில் புனே மாவட்டத்தில் இதேபோன்ற வழக்கு பதிவாகியுள்ளது, அங்கு மருத்துவர்கள் பிரதமேஷ் பாட்டீலின் உயிரணுவை அவரது தாயார் ராஜ்ஸ்ரீ பாட்டீலிடம் ஒப்படைத்தனர். அவர் வாடகைத் தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குப் பாட்டியானார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
இதேபோன்று கேரளாவில் கார் விபத்தில் பலியான கணவரின் உயிரணு மூலம் இளம்பெண் இரட்டை குழந்தைகளை பெற்ற சம்பவம் நடந்துள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.