< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
8 Nov 2024 5:45 PM IST

காங்கிரஸ் கூட்டணி சக்கரம் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்றது என்று பிரதமர் மோடி கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணிகளை சேர்ந்த மாநில தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:

ஒரு ஜாதியை இன்னொரு ஜாதியை எதிர்த்துப் போராட வைக்கும் ஆபத்தான ஆட்டத்தை காங்கிரஸ் ஆடுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னேறுவதை காங்கிரசால் ஏற்க முடியாது என்பதால் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இவை அனைத்தும் ஒற்றுமையாக இருந்தால் காங்கிரசின் அரசியல் முடிந்து விடும்.நேரு காலத்தில் இருந்தே காங்கிரசும் அவரது குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தனர்.

ராஜீவ் காந்தி கூட ஓபிசி இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தார். எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்கள் அதிகாரம் பெற்றால், அவர்களின் அரசியல் கடையின் ஷட்டர் இழுத்து மூடப்படும் என்பது அவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்திக்குப் பிறகு, இப்போது இந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறை பட்டத்து இளவரசரும் அதே ஆபத்தான மனப்பான்மையுடன் செயல்படுகிறார். எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் ஒற்றுமையை உடைப்பதும், ஓபிசி சமுதாயத்தின் ஒற்றுமையை சிதைப்பதும்தான் காங்கிரசின் ஒரே நோக்கம்.

ஓபிசி மற்றும் எஸ்டி சமூகங்களை பல்வேறு சாதிகளாக பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் - உங்களிடம் ஒற்றுமை இருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நாம் ஒற்றுமையாக இருந்து காங்கிரசின் ஆபத்தான விளையாட்டை முறியடித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் இருந்து அரசியலமைப்பை அகற்ற காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி விரும்புகிறது.

சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது. ஜம்மு-காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு மட்டுமே பின்பற்றப்படும். 370வது சட்டப்பிரிவை திரும்பப் பெறுவது குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எப்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதையும், பாஜக எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் தூக்கி எறியப்பட்டதையும் நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதை நாடும், மராட்டிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களிடம் ஏதாவது கேட்டல் நீங்கள் எனக்கு தாராளமாக ஆசீர்வாதங்களை வழங்கி உள்ளீர்கள். 2014 சட்டமன்றத் தேர்தலின் போது இந்த துலே நகருக்கு வந்து, மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைத்தேன். மராட்டியத்தில் 15 ஆண்டுகால அரசியல் சுழற்சியை முறியடித்து பாஜகவை வரலாறு காணாத வெற்றிக்கு அழைத்துச் சென்றீர்கள்.

இன்று நான் மீண்டும் இங்கு துலே வந்துள்ளேன். மராட்டியத்தில் துலேயில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். இந்த கூட்டம், இந்த உற்சாகம் உண்மையில் அதிக நம்பிக்கையை அளிக்கிறது. பாஜக கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். கடந்த 2.5 ஆண்டுகளில் மராட்டிய வளர்ச்சி அடைந்துள்ள வேகத்தை நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் மராட்டியத்தின் முன்னேற்றத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். மராட்டியத்திற்கு தேவையான நல்லாட்சியை பாஜக கூட்டணி அரசால் மட்டுமே வழங்க முடியும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

காங்கிரஸ் கூட்டணி சக்கரம் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்றது. அங்குள்ள அனைவரும் ஓட்டுநர் இருக்கைக்கு அமர சண்டை போடுகிறார்கள். நாங்கள் மக்களை கடவுளின் மறுவடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்காக அரசியலில் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியின் 2.5 வருட மோசடி அரசை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இவர்கள் முதலில் அரசை கொள்ளையடித்து விட்டு பிறகு மக்களிடம் கொள்ளை அடித்தார்கள். அதன்பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2.5 ஆண்டுகளில் மராட்டியத்தில், தனது பெருமையையும் வளர்ச்சியின் நம்பிக்கையையும் மீட்டெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்