< Back
தேசிய செய்திகள்
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு திட்டவட்டம்
தேசிய செய்திகள்

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

தினத்தந்தி
|
22 July 2024 6:50 PM IST

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. இதனால், கூட்டணி கட்சிகள் பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில்தான், கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. நீண்ட காலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜேடியூ, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அக்கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012-ன் படி பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டலுக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், "கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணங்களுக்காக கடந்த காலங்களில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் சில மாநிலங்களுக்கு திட்ட உதவிக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, போதிய அளவு நிதி ஈட்டுவதற்கு சாத்தியமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போதுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அளவுகோல்களின் அடிப்படையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்பதைக் கண்டறிந்தது"என்று தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்