முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிப்பதற்கு சட்டரீதியாக எந்த தகுதியும் இல்லை - ஆனி ராஜா
|நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பெண் நடிகை அளித்த புகாரில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் மலையாள நடிகர் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முகேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க சட்டரீதியாகவோ தார்மீக தகுதியோ அவருக்கு இல்லை என்று சிபிஐ தலைவர் ஆனி ராஜா கூறியுள்ளார். மேலும் ஆனி ராஜா கூறியதாவது, "நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்து, திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு இது துணைபுரியும். தற்போது முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக அல்லது சட்டப்பூர்வ தகுதி இல்லை. எனவே அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.