< Back
தேசிய செய்திகள்
எந்த முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது: ப.சிதம்பரம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எந்த முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது: ப.சிதம்பரம்

தினத்தந்தி
|
3 Sept 2024 5:26 PM IST

எந்த முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், 'புல்டோசர் நடவடிக்கை' என்கிற பெயரில், குற்றம்செய்பவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குற்றம் செய்யப்பட்டவர்கள் வீடுகள் மட்டுமன்றி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவா்களின் வீடுகளும் இடிக்கப்படுகின்றன.

இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறுகையில், குற்ற வழக்கில் தொடா்புடையவா் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இதுதொடா்பாக, நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை சுப்ரீம் கோர்ட்டு வகுக்கும் என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்நிலையில் முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "2024-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், புல்டோசர் நீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். மத்தியிலும், பல மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. அரசு, தண்டனையின்றி சட்டத்தை மீறி, 'புல்டோசர் நீதி' என்பது நீதியை வழங்குவதற்கு சமம் என்று தோன்றச் செய்துள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு இழிவான இந்த நடைமுறையை நிராகரித்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் . ஒரு கட்டுமானத்தை இடிக்கக்கூடிய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். சட்டப்படி மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டுமே தவிர, எந்த முதல்-மந்திரியோ அல்லது அரசாங்கமோ எந்த ஆளுங்கட்சியாக இருந்தாலும் புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்கக் கூடாது

இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில், கண்மூடித்தனமான கைதுகள், நீண்டகால காவல் மற்றும் காவலில் வைக்கப்பட்ட மரணங்கள்" பற்றிய தீர்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

2024 ம் ஆண்டுக்கான காங்கிரசின் அறிக்கையில், இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நாங்கள் உறுதியளித்தோம். இந்த தீய செயல்களுக்கு எவ்வளவு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் ஜனநாயகம் அமையும்" என்று அதில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்