ஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: சரத்பவார் பேட்டி
|கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது.
இந்தியா கூட்டணி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க இந்தியா கூட்டணியும் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தநிலையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடமோ அல்லது தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிடமோ நாங்கள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். இந்தியா கூட்டணி கூட்டம் நாளை(இன்று) டெல்லியில் நடக்க வாய்ப்பு உள்ளது. இதன்படி நான் டெல்லியில் இருப்பேன்.
அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி நாங்கள் இதுவரை யோசிக்கவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால நடவடிக்கை குறித்து ஒருமனதாக முடிவெடுப்போம். உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு ஒரு புதிய திசையை காட்டி உள்ளது. மராட்டியத்தில் 10 இடங்களில் எனது கட்சி போட்டியிட்டது. எங்களின் கட்சியின் செயல்பாடு திருப்தி தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.