< Back
தேசிய செய்திகள்
சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி
தேசிய செய்திகள்

சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி

தினத்தந்தி
|
1 July 2024 2:19 PM IST

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார்.

டெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவரும் அவாமி இத்தேஹாத் கட்சி தலைவர் ஷேக் அப்துல் ரஷீத் என்ற என்ஜினீயர் ரஷீத் (வயது 56). இவர் 2004 மற்றும் 2014ல் லாங்கேட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.

இதற்கிடையே, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 2019ம் ஆண்டு என்ஜினீயர் ரஷீத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்தது. கைது செய்யப்பட்ட ரஷீத் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, 2024 நாடாளுமன்ற தேர்தலில் என்ஜினீயர் ரஷீத் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். சிறையில் இருந்தவாறு ரஷீத் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கான தேர்தல் பிரசார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரத் ரஷீத் மேற்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் என்ஜினீயர் ரஷீத் வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றிபெற்றபோது பயங்கரவாத வழக்கில் சிறையில் உள்ள ரஷீத் இதுவரை எம்.பி.யாக பதவியேற்கவில்லை.

இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க தனக்கு ஜாமீன் வழங்கும்படி என்ஜினீயர் ரஷீத் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இந்த வழக்கில் என்.ஐ.ஏ. பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிப்பதாக டெல்லி கோர்ட்டில் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அதேவேளை, பதவியேற்பு நடைமுறைகளை ஒரேநாளில் முடிக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையின்போது என்ஜினீயர் ரஷீத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்றும் டெல்லி ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

என்.ஐ.ஏ. பதில்மனு தாக்கல் செய்துள்ள நிலையில் என்ஜினீயர் ரஷீத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை டெல்லி கோர்ட்டில் நடைபெற்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்