அடுத்த முறை நெஞ்சில் சுட்டு விடுவேன்; கோவிலில் மட்டும் கொள்ளை அடிக்கும் நபருக்கு எஸ்.பி. எச்சரிக்கை
|உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள கோவிலில் இரவில், மணிகளை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றபோது, ஷாவ்கீன் மற்றும் ஷாருக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
படாவன்,
உத்தர பிரதேசத்தின் படாவன் பகுதியை சேர்ந்தவர் ஷாவ்கீன். இவருடைய நண்பர் ஷாருக். ஷாவ்கீன் இதுவரை 12-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருடி பல முறை சிறை சென்றவர். கோவில்களை மட்டுமே குறிவைத்து உண்டியலில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவார்.
இந்நிலையில், சம்பல் பகுதியில் உள்ள கோவிலில் இரவில், மணிகளை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றபோது, ஷாவ்கீன் மற்றும் ஷாருக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பயந்து போன அவர்கள் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். போலீசாருக்கும், இவர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. எனினும், ஷாருக் தப்பி விட்டார். ஷாவ்கீன் காலில் குண்டு காயத்துடன் பிடிபட்டார்.
அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு எஸ்.பி. கிருஷ்ண குமார் விஷ்னோய் சென்றார். குற்றவாளியிடம் சிறிது நேரம் பேசினார். அவருடைய உடல்நலம் பற்றி பக்கத்தில் இருந்த போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலானது. அப்போது, படுத்து இருந்த ஷாவ்கீன், இரு காதுகளையும் பிடித்தபடி எஸ்.பி.யிடம் மன்னிப்பு கேட்டார்.
இதுபோன்று மீண்டும் திருட்டில் ஈடுபட்டால், காலில் அல்ல நெஞ்சில் சுட்டு விடுவோம் என எஸ்.பி. எச்சரித்து உள்ளார். தப்பியோடிய ஷாருக்கை கைது செய்யும் பணி நடந்து வருகிறது.