
என்னை மன்னியுங்கள்...! கடிதம் எழுதி வைத்து விட்டு நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட விடுதி அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
ஜோத்பூர்,
ராஜஸ்தானில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, தங்கி, மாணவர்கள் பலர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். எனினும், அவர்களில் பலர் தற்கொலை செய்யும் அதிர்ச்சியான விசயங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ராஜஸ்தானில் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் தற்கொலை சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், மசோதா ஒன்றை ஆளும் அரசு கொண்டு வரவுள்ளது. ஆனால், சில பிரிவுகளில் திருத்தம் வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் ஒருவர் தற்கொலை செய்து உள்ளார். பீவார் நகரில் உள்ள ராஸ் பகுதியை சேர்ந்த ரோகித் பாட்டி (வயது 19) என்பவர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். அவருடைய உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் விடுதி அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
அதில், என்னை மன்னித்து கொள்ளுங்கள் சின்னு என குறிப்பிட்டு உள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு, ஜோத்பூருக்கு வந்த அந்த பயிற்சி மாணவர், நீட் தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். அவருடைய உடலை விடுதி உரிமையாளரே முதலில் பார்த்து, அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
அவர் யாரிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடைய தொலைபேசி அழைப்புகளை பற்றி நன்றாக ஆய்வு செய்த பின்னரே தற்கொலைக்கான சரியான காரணம் பற்றி தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.