
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க. நிலைப்பாட்டுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், காங்கிரஸ் ஒப்புதலுடன் சென்னை கூட்டத்தில் பங்கேற்பது என தெலுங்கானா முதல்-மந்திரி முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில், 2026-ம் ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டு "கூட்டு நடவடிக்கைக்குழு" ஒன்றை அமைத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சி தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 7 மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளுக்கும் முன்னாள் முதல்-மந்திரிகளுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.
2026-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், தங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாக குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப்பெற நேரிடும்.
அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும், மாநிலத்திற்குரிய முக்கிய வளங்களை பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்க செய்வதற்குமுள்ள திறனை குறைத்து விடும்.
அதனால் இதன் முதல் கட்டமாக, வரும் 22-ந்தேதி அன்று சென்னையில் தொடக்க கூட்டம் ஒன்றை நடத்த முன்மொழிந்து இருக்கிறேன். நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்து செல்ல இந்த தருணத்தில் உங்களின் ஒத்துழைப்பை கோருவதாகவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில், டெல்லியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான தி.மு.க. குழுவினர், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை இன்று நேரில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். கொள்கையின்படி, கூட்டத்தில் பங்கேற்க ஒப்பு கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பை எந்த நிலையிலும் எங்களால் ஏற்க முடியாது என கூறியதுடன், தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக பா.ஜ.க. சதி செய்கிறது என்றும் கூறினார். பா.ஜ.க. பழிவாங்கும் அரசியலை செய்கிறது. தென்னிந்தியாவில், அக்கட்சியே இல்லை என்ற சூழலில், தென்னிந்தியாவுக்கு எதிராக தொகுதி மறுசீரமைப்பின் வழியே பழிவாங்கலில் ஈடுபட விரும்புகிறது என்றார்.
சமீபத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ஒரு தொகுதி கூட தென்னிந்திய மாநிலங்களுக்கு குறையாது என உறுதி கூறினார். இந்த சூழலில், வருகிற 22-ந்தேதி இந்த விவகாரத்தில் ஆலோசனை மேற்கொள்ள, தொடக்க கூட்டம் ஒன்றை கூட்ட இருக்கிறார்.