தேர்தல் வெற்றியை கொண்டாட ஆரத்தி எடுத்தபோது தீ விபத்து: எம்.எல்.ஏ. படுகாயம்
|தேர்தல் வெற்றியை கொண்டாட ஆரத்தி எடுத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் எம்.எல்.ஏ. படுகாயமடைந்தார்.
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 49 தொகுதிகளிலும், பிற கட்சிகள் (சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட) 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், மராட்டியத்தின் சண்ட்கட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சிவாஜி பாட்டீல் அபார வெற்றிபெற்றார்.
இதையடுத்து, வெற்றி கொண்டாட்டத்தின்போது மஹ்லோன் பகுதியில் சிவாஜி பாட்டீலுக்கு பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் எம்.எல்.ஏ. சிவாஜி பாட்டீல், மற்றும் அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.