புத்தாண்டு கொண்டாட்டம்: மும்பையில் ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
|விழிப்புணர்வு வாசகத்துடன் பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மும்பை,
2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் தயாராகி வருகிறது. மாநில அரசு இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்து உள்ளதால் விருந்துகளில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது விருந்து நடைபெறும் ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:-
குடிபோதையில் விபத்துகள் அல்லது விரும்பதகாத சம்பவம் நடைபெறாத வகையில் விருந்தினர்களுக்கு மதுபானம் வழங்குவதில் கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 5 மணி வரையில் ஓட்டல்கள் திறந்து இருக்கும். விருந்தினர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
அவர்கள் வீடு செல்ல வசதியாக மாற்று டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். விருந்தில் மது அருந்த முறையான அனுமதி கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்கப்பட வேண்டும். இதற்காக அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும். குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டல்களில் பேனர்கள் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.