விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்களுக்கு புதிய மேல்சாந்தி அறிவுரை
|சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான சபரிமலை மேல்சாந்தியாக கொல்லத்தை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது கொல்லம் மகாலட்சுமி தேவி கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருகிறார். அருண்குமார் நம்பூதிரி சமூக வளைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
பிரமச்சாரியான அய்யப்பனை தரிசனம் செய்ய 41 நாட்கள் பிரமச்சர்யத்தை கடை பிடித்து விரதம் மேற்கொள்வது சிறந்தது. 41 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் எத்தனை நாட்கள் விரதம் மேற்கொள்ள முடியுமோ அத்தனை நாட்கள் கண்டிப்பாக பயபக்தியுடன் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் நாட்களில் சிலரது வீடுகளில் துக்க சம்பவங்கள் நடக்கலாம். அதற்காக சாமி தரிசனத்தை ஒத்தி வைக்க தேவையில்லை. குறிப்பிட்ட நாட்கள் மட்டும் மாலையை கழற்றி வைத்து விட்டு மீண்டும் மாலையை முறைப்படி அணிந்து விரதம் மேற்கொண்டு அய்யப்பனை தரிசிக்கலாம். இதனால் தெய்வ கோபம் ஏற்பட போவதில்லை.
சபரிமலைக்கு வர முடியாத பக்தர்கள் தங்களது வீடுகளில் நெய்விளக்கு ஏற்றி பக்தியுடன் வழிபட்டால் அய்யப்பனின் அருள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.