நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க மத்திய அரசு குழு அமைப்பு
|இஸ்ரோ முன்னாள் தலைவர் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது.
இந்தநிலையில் மாணவர்களிடமிருந்து புகார்களை பெற மத்திய அரசு உயர்நிலைக்குழு ஒன்று அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிப்பதற்கான https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ இந்த இணையதள முகவரியையும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நடந்து முடிந்த நீட் தேர்வு முறைகேடு புகாரை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறவிருந்த நெட் தேர்வு மற்றும் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.