< Back
தேசிய செய்திகள்
நீட் தேர்வு விவகாரம்: யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை: மத்திய கல்வி மந்திரி
தேசிய செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை: மத்திய கல்வி மந்திரி

தினத்தந்தி
|
17 Jun 2024 10:20 AM GMT

நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில் இதில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வுத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் மதிப்பெண்ணை ரத்து செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், சம்மந்தப்பட்ட 1,563 மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீட் விவகாரத்தில் யாரேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

முதற்கட்ட தகவல்படி, குறைவான தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டதால் சில மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் மத்திய அரசிற்கு உடன்பாடு இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இரு இடங்களில் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று மாணவ-மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உள்பட யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்