இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக... சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல்
|பா.ஜனதா சார்பில் மீண்டும் ஓம் பிர்லா, இந்தியா கூட்டணி சார்பில் கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இதன் மூலம் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.
புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பதற்கும் மற்றும் சபாநாயகரை தேர்ந்து எடுப்பதற்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் 2 நாட்களும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மக்களவை சபாநாயகரை பொறுத்தவரை, சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாகவே தேர்வு செய்து உள்ளன. அதே மரபை இந்த முறையும் தொடர மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்பியது.எனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அவர்களிடம் பேசுவதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்தை அரசின் பிரதிநிதியாக நியமித்தது. அவரும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தார். அப்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிபந்தனை விதித்தன.
துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது என்ற நாடாளுமன்ற மரபை அரசு பின்பற்றினால் சபாநாயகர் நியமனத்தில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார் என்றும் கூறின. ஆனால் துணை சபாநாயகர் பதவியில் மத்திய அரசு பிடிகொடுக்கவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று காலையிலும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். சபாநாயகர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் ஓம் பிர்லாவை மீண்டும் நிறுத்துவதாகவும் அவரை ஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அவருடன் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு ஆகியோரும் உடன் இருந்தனர்.
பின்னர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோரை தனது அலுவலகத்துக்கு அழைத்து ராஜ்நாத் சிங் பேசினார். அப்போதும் துணை சபாநாயகர் விவகாரத்தில் எந்த உறுதியையும் ராஜ்நாத் சிங் வழங்கவில்லை. இதனால் ஓம் பிர்லாவை ஆதரிக்கும் கடிதத்தில் கையெழுத்து போடாமல் கே.சி.வேணுகோபால் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னில் சுரேசை (வயது 66) வேட்பாளராக அறிவித்தன. அவரை ஆதரித்து 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், கூட்டணி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 543 உறுப்பினர் மக்களவையில் ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால் பா.ஜனதா வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு ஓம் பிர்லா வெற்றி பெற்றால், கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பெருமை அவரை சேரும். இவர் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து 3-வது முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
அதேநேரம் இவரை எதிர்த்து போட்டியிடும் கொடிக்குன்னில் சுரேஷ் 8 முறை எம்.பி. ஆவார். தலித் பிரிவை சேர்ந்த இவர் கேரளாவின் மாவேலிக்கரை தனித்தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவர் திருவனந்தபுரம் கொடிக்குன்னில் பகுதியில் 1962-ம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1989-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தாலும், பா.ஜனதாவின் முடிவுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜனதா முன்வந்தால், ஆளுங்கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரிப்போம் என்று கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறினார்.
ஒருவேளை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தால் அது சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக இருக்கும். ஏனெனில் இதுவரை சபாநாயகரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாகவே தேர்ந்தெடுத்து உள்ளன.