நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்: பிரதமர் மோடி பேசுகிறார்
|பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, நடைபெறும் முதல் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் நாளை உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில், ஆளும் தொகுதி எம்.பி.க்களிடம் அவர் ஆற்றும் முதல் உரை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த காலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களிடம் சில சந்தர்ப்பங்களில் உரையாற்றியிருந்தாலும், குறிப்பாக அவர் தனது மூன்று பதவிக்காலங்களுக்கும் முன்னதாகவே அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டங்களில் அமர்வுகளின் போது பேசுவது வழக்கம்.
பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2014க்குப் பிறகு முதன்முறையாக, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்களவையில் பெரும்பான்மையை இழந்ததுடன், அரசாங்கம் தொடர்வதற்காக அதன் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருக்கும் சூழலில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை மற்றும் மாநிலங்களைவில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நாளை (ஜூலை 2) பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
இன்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.