
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை

2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி,
தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன. கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன.
இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சி.வி. சண்முகம், தம்பிதுரை, கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தனர். தமிழக சட்டசபை தேர்தல், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மணிநேரத்திற்குமேல் ஆலோசனை நடைபெற்றது.
இந்த சந்திப்பை தொடர்ந்து 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமையும் என்பது பெருமளவு உறுதியாகியுள்ளது.