ஜம்மு-காஷ்மீர்: சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு
|ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, சட்டசபை சபாநாயகர் பதவிக்கு தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், சரார்-இ-ஷரீப்பின் 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம் ராதர் பெயரை விவசாயத்துறை மந்திரி ஜாவத் அஹ்மத் தார் முன்மொழிந்தார். எதிர்க்கட்சியான பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவும் அவரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதன்பின்னர் பேசிய உமர் அப்துல்லா, ஒட்டுமொத்த சபையின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் பதவி வகித்துள்ளார். மேலும் 2002 முதல் 2008 வரை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று யூனியன் பிரதேசத்தின் முதல் அரசை அமைத்துள்ளது.