காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லா
|காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா சந்தித்தார்.
ஜம்மு,
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீர் கடந்த 2019-ம் ஆண்டு, காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் சட்டசபை கொண்ட யூனியன் பிரதேசமான காஷ்மீரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்து புதிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக (முதல்-மந்திரி) தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது. இந்தநிலையில், நேற்று துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்தார். அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விரைவில் அவர் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.