நக்சலைட்டுகள் தாக்குதல்.. சிதறிய வாகனம்: 8 பாதுகாப்பு படை வீரர்கள், டிரைவர் பலி
|பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கார் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை தாக்குதல் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி வரும் நக்சலைட்டுகளை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையை நக்சலைட்டுகள் குறிவைத்து தாக்குகின்றனர்.
அவ்வகையில், பிஜப்பூரில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தண்டேவாடா, பிஜப்பூர் மற்றும் நாராயண்பூர் ஆகிய மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிரான கூட்டு தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டு தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் படையினர் ஒரு வாகனத்தில் திரும்பியபோது, சாலையில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில், வாகனம் தூக்கி வீசப்பட்டு சிதறியது. வாகனத்தில் இருந்த 8 வீரர்கள் மற்றும் டிரைவர் உடல் சிதறி பலியாகினர்.
நேற்று முன்தினம் பஸ்தார் மாவட்டத்தில் நடந்த மோதலில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.