ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார்
|ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த அரசியல் சாசனம் மீதான சிறப்பு விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து இன்றும் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி மறுத்துள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பன்சுரி சுவராஜ் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், "உடல் ரீதியான தாக்குதல் மற்றும் தாக்குதலை தூண்டுதல் ஆகியவற்றிற்காக ராகுல் காந்தி மீது புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.