< Back
தேசிய செய்திகள்
என்னுடைய கனவு... இந்திய விவசாயிகளின் உற்பத்தி பொருள் பற்றி பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
தேசிய செய்திகள்

என்னுடைய கனவு... இந்திய விவசாயிகளின் உற்பத்தி பொருள் பற்றி பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
24 Feb 2025 6:44 PM IST

நாட்டில், கடந்த ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட முயற்சிகளால், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி அதிக அளவில் அதிகரித்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 19-வது தவணையாக விவசாயிகளுக்கு நிதியை விடுவிக்கும் நிகழ்வு பீகாரில் இன்று நடந்தது. விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் இந்த நடைமுறையால், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் பெரிய அளவில் பலன் பெறுகின்றனர்.

இதன்படி, 9.8 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.22 ஆயிரம் கோடி நிதி நேரடியாக செலுத்தப்படும். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு 4 வலிமையான தூண்கள் உள்ளன என நான் டெல்லி செங்கோட்டையில் கூறினேன். ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரே அந்த தூண்கள் ஆவர். விவசாயிகளின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை என்று பேசியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில், அரசின் முயற்சிகளால், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி அதிக அளவில் அதிகரித்து உள்ளது. இதனால், தங்களுடைய விளைபொருட்களுக்கு அதிக விலையை விவசாயிகள் பெற தொடங்கியுள்ளனர். முதன்முறையாக, பல வேளாண் பொருட்களின் ஏற்றுமதி தொடங்கியுள்ளது என்று பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, உலகில் ஒவ்வொரு சமையல் அறையிலும் இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களில் ஏதேனும் சில பொருட்கள் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. நடப்பு ஆண்டு பட்ஜெட்டில், இந்த தொலைநோக்கு பார்வையுடனான திட்டம் இடம் பெற்று உள்ளது. பட்ஜெட்டில், பிரதம மந்திரி தன் தன்யா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, பயிர் உற்பத்தி குறைவாக உள்ள நாட்டின் 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்படும். அந்த மாவட்டங்களில், வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான சிறப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் என பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்