40 ஆண்டுகளுக்கு முன்பு மாம்பழத்தால் நிகழ்ந்த கொலை; 3 கைதிகளின் ஆயுள் தண்டனை குறைப்பு
|40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஆயுள் தண்டனை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு விஸ்வநாத் சிங் என்பவரை லத்தியால் அடித்து கொலை செய்த வழக்கில் மன் பகதுர் சிங், பாரத் சிங் மற்றும் பானு பிரதாப் சிங் ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் சிலர் மாம்பழங்களை பறித்ததாக ஏற்பட்ட தகராறு மோதலாக மாறி, பின்னர் கொலையில் முடிந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் கைதான 3 பேருக்கும் 1986-ம் ஆண்டு கோண்டா மாவட்ட கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை கடந்த 2022-ம் அண்டு அலகாபாத் ஐகோர்ட்டு உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுதான்ஷு துலியா, நீதிபதி அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த கொலை வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்து, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் கைதான 3 பேரின் ஆயுள் தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.