மும்பை பயங்கரவாத தாக்குதல் - கசாப்பை அடையாளம் காட்டிய சிறுமி; தொடரும் துயரங்கள்
|மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவிகா, நீதிக்கு துணை நின்றதற்காக நான் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாத கும்பல் திடீர் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் நடத்திய இந்த தாக்குதல் 29-ந்தேதி வரை தொடர்ந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டு, படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியை போலீசார் உயிருடன் பிடித்தனர். கசாப்புக்கு எதிராக வழக்கு நடந்தது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டு, தற்போது உயிருடன் உள்ள தேவிகா ரோதவன் (வயது 25), சம்பவத்தின்போது நடந்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, கசாப்பை பயங்கரவாதி என தேவிகா அடையாளம் காட்டினார். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது, இவருடைய காலில் குண்டு காயம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, அப்போது எனக்கு வயது 9. கசாப்பை கொல்ல வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால், கோர்ட்டில் கசாப்பை அடையாளம் காட்டியதுதான் என்னால் முடிந்த ஒரே விசயம்.
பயங்கரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும் என கூறும் அவர், சமூகத்தில் தவறுகளுக்கு எதிராக மக்கள் குரலை உயர்த்தி ஒலிக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். இந்த தாக்குதல்களுக்கு பின்னர் பலரிடம் இருந்து ஆதரவு கிடைத்தபோதும், சில உறவினர்கள் இவருடைய குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்க தொடங்கினர்.
இதுபற்றி கூறிய தேவிகா, நீண்டகாலம் வரை உறவினர்கள், அவர்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு எங்களை அழைக்கவில்லை. தற்போது, நிலைமை மேம்பட்டுள்ள சூழலில் மீண்டும் எங்களுக்கு அழைப்புகள் வர தொடங்கியுள்ளன என்றார்.
அவருடைய உடலில் தொடர்ந்து வலி இருந்து வருகின்ற போதிலும், மனவுறுதியுடன் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, என்னுடைய கால் இன்னும் வலித்து கொண்டிருக்கிறது. குளிர் காலங்களில் அடிக்கடி வீங்கி விடும். ஆனால், நீதிக்கு துணை நின்றதற்காக நான் பெருமை கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பதும், அவர்களுக்காக குரல் கொடுப்பதும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில், சத்ரபதி சிவாஜி மகாராஜா ரெயில் நிலையம், ஓபராய் டிரைடன்ட் ஓட்டல், தாஜ்மகால் பேலஸ் ஓட்டல், லியோபோல்ட் கபே, காமா மருத்துவமனை மற்றும் நாரிமன் ஹவுஸ் யூத சமூக மையம் ஆகியவற்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பிடிபட்ட பயங்கரவாதியான கசாப்பிற்கு, 4 ஆண்டு விசாரணைக்கு பின்னர் 2012-ம் ஆண்டு நவம்பர் 21-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.