சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நடிகர் கோவிந்தா டிஸ்சார்ஜ்
|தொற்று ஏற்படுமென்பதால் கோவிந்தாவை யாரும் நேரில் பார்க்க முடியாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
இந்தி திரையுலகில் முன்னணி நடிகரும், சிவசேனா மூத்த தலைவராக உள்ளவர் கோவிந்தா. இவர் இந்தியில் 165க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகர் கோவிந்தா கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 1ம் தேதி காலை 6 மணிக்கு மும்பையிலிருந்து கொல்கத்தா புறப்படும் விமானத்தை பிடிக்க தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு செல்வதற்கு முன்பாக தான் வைத்திருக்கும் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்திருக்கிறார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக கைத்தவறி அந்த துப்பாக்கி கீழே விழுந்து கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்தது.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது காலில் இருந்த குண்டை மருத்துவர்கள் அகற்றினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தா சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கோவிந்தா தனது உடல்நிலைக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் கோவிந்தா குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், "6 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். நிற்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். ஆனால், நலமுடன்தான் இருக்கிறார். சில நாட்களில் நடனம் ஆடுவார். அவருக்காக பலரும் வேண்டினார்கள். எங்களுக்கு மாதா ராணியின் ஆசிர்வாதம் இருக்கிறது. 6 வாரம் ஓய்வெடுக்க உள்ளதால் யாரும் அவரைப் பார்க்க முடியாது. தொற்று ஏற்படுமென்பதால் அவரை யாரும் நேரில் பார்க்க முடியாது" என்றனர்.