முல்லைப் பெரியாறு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூவ் நெடும்பரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முல்லைப் பெரியாறு வழக்கில் அணை பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி நிபுணர்கள் குழுவை, மத்திய அரசு ஏன் இதுவரை அமைக்கவில்லை? அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது?. அணை உரிமையாளர் என்ற முறையில் நிபுணர் குழுவை தமிழகம் அமைத்திருக்க வேண்டும்?. என்று சுப்ரீம் கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இதையடுத்து தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலும் தேசிய குழு அமைப்பதிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.