அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
|நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்(மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. அதாவது பார்வதி பெயரில் இருந்த 3.16 ஏக்கர் நிலத்தை மூடா கையகப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதுகுறித்து விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் அனுமதி வழங்கினார். அதன்பேரில், மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆதாரத்தின் பேரிலும், சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின் பேரிலும் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நில முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதுடன், மைசூருவில் உள்ள மூடா அலுவலகத்தில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
இதுகுறித்து சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் நான் நிரபராதியாக வெளியே வருவேன். ஆனால் அரசியல் ரீதியாக பழிவாங்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.