
சித்தராமையா மனைவிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன் ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு

நில முறைகேட்டில் மந்திரி பைரதி சுரேஷ், சித்தராமையாவின் மனைவி அமலாக்கத்துறை வழங்கிய சம்மனை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவருக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக கூறி மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதுபோல், அமலாக்கத்துறை அதிகாரிகளும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி சித்தராமையாவின் மனைவி பார்வதி மற்றும் நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி சுரேசுக்கு பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி வைத்திருந்தனர். இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் பார்வதி, பைரதி சுரேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வந்தது.
ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக பார்வதி, பைரதி சுரேசுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அவர்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நில முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி, மந்திரி பைரதி சுரேசுக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மனை ரத்து செய்து நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு பிறப்பித்துள்ளார்.