ம.பி.: சாலை விபத்தில் 7 பேர் பலி; 10 பேர் காயம்
|மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 4 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர்.
ஜபல்பூர்,
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சிஹோரா-மஜ்காவன் சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி ஒன்று திடீரென ஆட்டோ மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் ஆவர். இவர்களை தவிர, 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிஹோரா பகுதியில் உள்ள முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும், சிஹோரா பகுதிக்கான எம்.எல்.ஏ. சந்தோஷ் சிங் பத்கரே, போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் சம்பவம் பற்றி அறிவதற்காக அந்த பகுதிக்கு சென்றார்.
அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார். காயமடைந்த நபர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என கூறியதுடன், நிதியுதவியாக ரூ.7,500 அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
இதேபோன்று, மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் சாலை விபத்து நிதியாக கூடுதலாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றார். சம்பல் யோஜனா பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.4 லட்சம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.