< Back
தேசிய செய்திகள்
புற்றுநோயால் தாய் பாதிப்பு: மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

புற்றுநோயால் தாய் பாதிப்பு: மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
6 March 2025 4:54 PM IST

புற்றுநோயால் தாய் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

எர்ணாகுளம்,

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கன்பரவூர் அடுத்த புத்தன்வேலிக்கரா அருகே அஞ்சுவழி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மகன் அம்பாடி (வயது 16), அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இதற்கிடையே சிறுவனின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிறுவனின் தாய் எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக சென்றார். உடன் தந்தையும் சென்றுள்ளார். இதனால் வீட்டில் சிறுவன் அம்பாடி மட்டும் இருந்தான். பின்னர் 2 பேரும் வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. இதனால் அவர்கள் 2 பேரும், கதவை நீண்ட நேரம் தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் மகன் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் மகன் அம்பாடி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக புத்தன் வேலிக்கரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்த சிறுவன் அம்பாடி உடலை மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புற்றுநோயால் தாய் பாதித்ததால் மனமுடைந்து சிறுவன் அம்பாடி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்