< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி

தினத்தந்தி
|
22 July 2024 5:57 AM GMT

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இதில், மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். அதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். இதனை தொடர்ந்து, அதன் மீது விவாதம் நடைபெறும். எனினும், இந்த கூட்டத்தொடரில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தின ஆவணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இதன்படி, 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 1 மணியளவில் மக்களவையிலும், மதியம் 2 மணியளவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படும். இதனை தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவார்.

இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் அவையில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு பற்றி எதிர்க்கட்சிகள் அமளியை கிளப்பின. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.

மேலும் செய்திகள்