பெண் பயணியிடம் அத்துமீறல்; வாடகை கார் டிரைவர் கைது
|பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கரியாஹட் பகுதிக்குச் செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலம் வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த கார் வந்தவுடன் அதில் ஏறி அவர் பயணம் செய்தபோது, காரில் ஏ.சி.யை இயக்குவது தொடர்பாக அவருக்கும், அந்த காரின் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கார் டிரைவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியதாகவும், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் ஜாதவ்பூர் பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அந்த பெண் ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட கார் டிரைவரை கஸ்பா பகுதியில் வைத்து கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் போலீசாரிடம் அந்த பெண் பயணம் செய்ததற்கான பணத்தை செலுத்தாமல் பாதி வழியில் இறங்கிச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.