மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: காங்கிரஸ் கணிப்பு
|நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக பிரதமர் மோடி தோல்வி அடைந்த பிறகு, அவரது செல்வாக்கு சரிந்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். எனினும் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகிறது.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருப்பதால் பிரதமர் மோடியை 'மூன்றில் ஒரு பங்கு பிரதமர்' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று பேசும்போது, "நாங்கள் 10 வருடங்களை நிறைவு செய்துவிட்டோம், இன்னும் 20 வருடங்கள் எஞ்சியிருக்கிறது. இதைவிட பெரிய உண்மை என்னவாக இருக்க முடியும். மூன்றில் ஒரு பங்கு முடிந்தது, மூன்றில் இரண்டு பங்கு இன்னும் உள்ளது. எனவே இந்த கணிப்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
அவரது பேச்சு, 'மூன்றில் ஒரு பங்கு பிரதமர்' என கூறிய ஜெய்ராம் ரமேஷை நேரடியாக தாக்குவது போன்று இருந்தது.
பிரதமரின் இந்த கருத்திற்கு ஜெய்ராம் ரமேசும் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எப்போதும் போல் 'மூன்றில் ஒரு பங்கு பிரதமர்' திரித்து பேசுகிறார். மூன்றில் ஒரு பங்கு என்பது அவரது ஆட்சிக்காலத்தை குறிப்பதல்ல. இது உயிரியல் ரீதியாக பிறக்காத நமது பிரதமரை குறிக்கிறது.
ஜூன் 4-ம் தேதி தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக பிரதமர் மோடி தோல்வி அடைந்த பிறகு, அவரது செல்வாக்கு மூன்றில் ஒரு பங்காக சரிந்துள்ளது. மேலும் அவர் தனது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக வேறு இரண்டு N-களை (நாயுடு, நிதிஷ்) நம்பியிருக்கிறார். எனவே, அவரது அரசு நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.