தகுதியான மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதை தடுக்கவே 'நீட்' தேர்வு முறைகேடு - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
|குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மூலமும், தேசிய தேர்வு முகமை மூலமும் நீட் தேர்வு ஊழலை மோடி அரசு மூடி மறைக்க தொடங்கி உள்ளது.
வினாத்தாள் கசியவில்லை என்றால், பீகாரில் வினாத்தாள் கசிவுக்காக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்?. வினாத்தாள் விற்பனையில் ஈடுபடும் கல்வி மாபியாவுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம்வரை கொடுக்கப்பட்டதை பாட்னா போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு அம்பலப்படுத்தியது.
அதுபோல், குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. பயிற்சி மையம் நடத்திய ஒருவர், ஒரு ஆசிரியர், மற்றொருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கிடையே ரூ.12 கோடி பரிமாற்றம் நடந்ததை குஜராத் போலீஸ் கண்டுபிடித்தது.
மோடி அரசு சொல்வதுபோல், வினாத்தாள் கசியவில்லை என்றால், இந்த கைது நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது?.
தகுதியான மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படிப்பதை தடுப்பதற்காகவே வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் மற்றும் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக தோன்றுகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.