< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி - தொடரும் பதற்றம்

image Courtacy: PTI

தேசிய செய்திகள்

மணிப்பூர்: துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி - தொடரும் பதற்றம்

தினத்தந்தி
|
14 Nov 2024 6:34 AM IST

தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி ஏற்பட்ட இனக்கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூரின் ஜரிபாம் மாவட்டத்தில் மெய்தி இன மக்கள் அதிகம் வாழும் கிராமத்துக்குள் புகுந்து வெறியாட்டத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜரிபாம் மாவட்டத்தின் ஜகுரடோர் கரோங் பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதன்பின்னரும் அடங்காத பயங்கரவாதிகள் ஜரிபாம் மாவட்டத்தில் தொடர்ந்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். 3 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் பிடியில் பணய கைதிகளாக உள்ள அந்த 6 பேரையும் மீட்க பாதுகாப்பு படைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜரிபாம் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், 6 பணய கைதிகளை மீட்க வலியுறுத்தியும் சர்வதேச அமைதி மற்றும் சமூக முன்னேற்றம், பழங்குடிகள் சங்கம், மாணவர் சங்கம் உள்பட 13 அமைப்புகள் மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இந்த முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. தலைநகர் இம்பால் உள்பட மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பூட்டப்பட்டன.

இந்த சூழலில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூருக்கு கூடுதலாக 2 ஆயிரம் படை வீரர்களை மத்திய அரசு அனுப்பியது. மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த 19 ஆயிரத்து 800 வீரர்கள் ஏற்கனவே மணிப்பூரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 1,500 வீரர்கள், எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த 500 வீரர்கள் என மொத்தம் 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதியன்று மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 10 குகி "கிராம தன்னார்வலர்களுக்கு" மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக மிசோரமின் மிகப்பெரிய சமூக அடிப்படையிலான தன்னார்வ அமைப்பு ஐஸ்வாலில் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

யங் மிசோ அசோசியேஷன் (ஒய்எம்ஏ) என்ற அமைப்பு, இறந்தவர்கள் "அப்பாவிகள்" என்று கூறியது, நடைபெற்ற சம்பவம் "கொலைகள்" என்று கண்டித்து, இந்தக் கொலைகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். மேலும் கொல்லப்பட்ட "அப்பாவி சகோதரர்களின்" குடும்பங்களுக்கு நிதி ரீதியாக இழப்பீடு வழங்குதல் மற்றும் மணிப்பூர் அமைதியின்மையை விரைவில் தீர்க்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே அசாமில் இருந்து மிசோரம் வழியாக இறந்தவர்களின் உடல்கள் மணிப்பூருக்குகொண்டு செல்லப்பட உள்ளன. இதுதொடர்பாக ஒய்.எம்.ஏ.வின் பொதுச் செயலாளரான பேராசிரியர் மல்சவ்ம்லியானா, அசாமில் இருந்து உடல்கள் வரும்போது ஐஸ்வாலில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் மிசோரமில் உள்ள ஐஸ்வாலில் இருந்து 12 மணி நேர பயணத்தில் உள்ள சுராசந்த்பூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்