< Back
தேசிய செய்திகள்
ஒரேநாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்:  விமானத்துறை மந்திரி சொல்வது என்ன..?

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஒரேநாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விமானத்துறை மந்திரி சொல்வது என்ன..?

தினத்தந்தி
|
21 Oct 2024 8:50 AM IST

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து உள்நாட்டு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இ-மெயில்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வரும் இந்த மிரட்டல்களை தொடர்ந்து அவற்றில் சோதனை நடத்தப்படுகின்றன. அப்போது அவை வெறும் புரளிகளாக இருப்பது அம்பலமாகி வருகிறது.இதைப்போல பல்வேறு விமான நிலையங்களிலும் வெடிகுண்டு புரளிகள் கிளப்பி விடப்படுகின்றன.

இந்த மிரட்டல் சம்பவங்கள் நாடு முழுவதும் விமான பயணிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசும், விசாரணை அமைப்புகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதில் விஸ்தாரா, இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களை சேர்ந்த தலா 6 விமானங்கள் இலக்காகி இருந்தன. மிரட்டலுக்கு உள்ளான விமானங்களில் சோதனை நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் புரளி என தெரியவந்தது. இதற்கிடையே சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை சோதனை செய்தபோது அது வெறும் புரளி என தெரியவந்தது.

இவ்வாறு 24 விமானங்களுக்கு நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் மூலம் இதுவரை மிரட்டலுக்கு உள்ளான விமானங்களின் எண்ணிக்கை 90-ஐ கடந்து உள்ளது. இதைத்தொடர்ந்து சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் நேற்று பல்வேறு விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் புரளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கிறது. மிரட்டல் அழைப்புகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். உளவுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்" என்று அவர் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்