< Back
தேசிய செய்திகள்
எம்.ஜி.ஆரின் அணுகுமுறை ஜனசேனா கட்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது - பவன் கல்யாண்
தேசிய செய்திகள்

'எம்.ஜி.ஆரின் அணுகுமுறை ஜனசேனா கட்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது' - பவன் கல்யாண்

தினத்தந்தி
|
24 Dec 2024 8:24 PM IST

எம்.ஜி.ஆரின் அணுகுமுறை ஜனசேனா கட்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அமராவதி,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, ஆந்திர மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"தமிழ் சினிமாவை மறுவரையறை செய்து, தமிழ்நாட்டின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த தொலைநோக்கு தலைவரான புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு இந்த நினைவு நாளில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அவரது முன்மாதிரியான தலைமையும் எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது சேவை மற்றும் அர்ப்பணிப்பு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. சேவை மற்றும் தலைமைத்துவத்தின் நீடித்த அடையாளமாக அவர் திகழ்கிறார்.

மத்திய அரசுடன் அமைதியான உறவைப் பேணி, அதே சமயம் மாநிலத்தின் நலன்களை பாதுகாத்த எம்.ஜி.ஆரின் அணுகுமுறை, ஜனசேனா கட்சியின் சித்தாந்தத்திற்கு வழிகாட்டும் கொள்கையாக விளங்குகிறது. மக்கள் அவரை புரட்சித் தலைவர் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இது அவர் மீதான ஆழ்ந்த மரியாதையையும், போற்றுதலையும் பிரதிபலிக்கிறது.

அவரது சிறப்பான பங்களிப்புகளுக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. இந்த நினைவு நாளில், புகழ்பெற்ற தலைவர் எம்.ஜி.ஆருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது மரபு மற்றும் நம்பிக்கைகள் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டட்டும்."

இவ்வாறு பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்