மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவேந்தல் கூட்டம் - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு
|மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவேந்தல் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கடந்த மாதம் 26-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவேந்தல் கூட்டம் அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர், சீக்கிய புனித நூலில் இருந்து 'ஷபாத்' எனப்படும் வசனத்தை வாசித்தார். இதனை தொடர்ந்து, மறைந்த மன்மோகன் சிங்கிற்காக ரகாப் கன்ஜ் குருத்துவாராவில் இன்று பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற உள்ளது.